புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடலும் ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அப்பகுதியில் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் அங்கு வசிக்கும் 8 மீனவ கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சியினரும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபுரம் கட்டப்படும் முகத்துவாரம் பகுதியில் அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் தலைமையில் உயர் மின்னழுத்த கோபுரம் கட்டுவதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயர் மின்னழுத்த கோபுரம் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களிடம் எங்களுக்கு தீர்வு காணப்படும் வரை இந்த பணி நடைபெற கூடாது என்றும், அதிகாரிகளை எங்களுடன் பேச சொல்லுங்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கவுன்சிலர் கே.கார்த்திக், கிராம நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.