தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் சென்ற 2 வருடங்களாக சரியாக திறக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த பிப்ரவரிமாத தொடக்கத்திலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிவுற்ற சூழ்நிலையில், மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஒருமாத கோடை விடுமுறைக்கு பிறகு 1 -10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்ற சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது அவசியம் என மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் இதை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் ஆகியவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதற்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 6 -12 ஆம் வகுப்புவரை பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 -12 ஆம் தேதி வரையிலும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 5 – 12 ஆம் தேதி வரையும் பருவ தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.