கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
அதன்பிறகு நீதிமன்றத்திலும் மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவமரையும் அனுமதிக்க வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் கோரிக்கையை நிராகரித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.
இதனிடையே நேற்று இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அப்படி பெறவில்லை என்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்ததையெடுத்து பெற்றோர்கள் மாணவியின் சடலத்தை வாங்க ஒப்புக்கொண்டனர் . இந்நிலையில் சனிக்கிழமை (இன்று ) மாணவியின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் வலியுறுத்தியது. இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகள் மாணவியின் சொந்த ஊரில் நடைபெற்று வருகிறது.
இதற்கான முன்னேற்பாடாக இன்று நடைபெறும் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள், அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ள போலீஸ் உள்ளூர் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று நேற்று அறிவுறுத்தியது. மேலும், கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம். மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள், அமைப்புகள் கலந்து கொள்ள கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.