பெட்ரோல் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவித்து தள்ளாடி வரும் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் அவதி மாறவில்லை. புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனேயை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்த நேற்றைய தினமே, பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் உள்ள கிழக்கு மாகாணத்தில் கின்னியா நகரில் பெட்ரோல் நிலையத்தில் நெடுநேரம் வரிசையில் நின்றுகொண்டிருந்த 59 வயதுடைய நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளர். அது போலவே மேற்கு மாகாணத்தில் மத்துகம நகரில் பெட்ரோல் நிலைய வரிசையில் காத்திருந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இதுபோன்ற அவல சம்பவங்கள் இலங்கையில் அரங்கேறி வருகின்றது. அந்நாட்டில் 10 நாள் இடைவெளிக்கு பின் இப்போதுதான் எரிபொருள் விநியோகம் தொடங்கியுள்ளது.