அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவி களிலிருந்தும் விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால், இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள பல்வேறு இடங்களில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை ராணுவத்தினர் தூக்கி எறிந்ததால் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே மக்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களுடைய வீட்டிற்கு திரும்பும் படியும், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படியும், அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் வரை மக்களுக்கு நான் உறுதியானதாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் போராட்டம் வன்முறையாக மாறும் போது அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.