ஆடி கிருத்திகை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆடி மாதம் கடந்த 17ஆம் தேதி பிறந்தது. ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை என்பது தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களில் ஒன்று. இந்த தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதனை ஒட்டி முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றன.
திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி போன்ற வகை காவடிகளை எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழில் twitter பதிவு வெளியிட்டுள்ள அவர் தெரிவித்ததாவது: “ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்றும் நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்” என்றும் கூறியுள்ளார்.