தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 24) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 24) சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அந்தந்த ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்லும் என கூறியுள்ளது.