Categories
உலக செய்திகள்

ஒடேசா துறைமுக தாக்குதலில் எங்களுக்கு சம்மந்தமில்லை…. ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்டது. ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியநாடுகள் கேட்டுகொண்டும் ரஷ்ய படைகள் பின் வாங்கவில்லை. இது நீண்ட கால போராக இருக்ககூடும் என்று அமெரிக்கா பின்னர் தெரிவித்தது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள், தளவாடங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. சென்ற சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படைகள் நேற்று உக்ரைனின் மத்தியபகுதியில் உள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் கடுமையான தாக்குதல்களை தொடுத்தது.

இந்த நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் கையெழுத்திட்டது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா, துருக்கி நாடுகள் முன்னிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாட்டு மந்திரிகளும் கையெழுத்திட்டனர். அதன்படி உக்ரைனின் கருங்கடல் பகுதியிலுள்ள துறைமுகங்களிலிருந்து தானிய ஏற்றுமதி மீண்டும் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில மணி நேரத்துக்குள்ளாக ரஷ்யபடைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தின என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கருங்கடலிலுள்ள உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த ஒடேசா துறைமுகம்மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் இதில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் இல்லை. ஒப்பந்தத்துக்கு எதிராக கருங் கடல் துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரஷ்யா ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது என உக்ரைன் அதிபரான ஜெலென்ஸ்கியும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ரஷ்யாவின் இந்த தாக்குதல் ஒன்றை மட்டும் நிரூபிக்கிறது. ரஷ்யா என்ன கூறினாலும், வாக்குறுதி வழங்கினாலும், அதனை செயல்படுத்தாமல் இருப்பதற்கான வழிகளை இது காட்டுகிறது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் துருக்கி பாதுகாப்பு மந்திரி ஹுலுசாய் அகார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ரஷ்யாவுடன் நாங்கள் தொடர்புகொண்டபோது, அவர்கள் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து விரிவாகவும் மற்றும் தீவிர விசாரணை செய்தும் வருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். துறைமுகங்களை தானிய ஏற்றுமதிக்காக திறப்பது குறித்து ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு தாக்குதல் நடந்துள்ளது என்பது உண்மையில் எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அகார் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக ஒடேசா ராணுவ நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் செர்ஹை பிராட்சக் கூறியிருப்பதாவது, 2 ஏவுகணைகள் துறைமுக உட்கட்டமைப்பு மீது மோதி தாக்குதல் ஏற்படுத்தியது. இரண்டு ஏவுகணைகள் உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு வீரர்களை சுட்டு வீழ்த்தியது என்று கூறியுள்ளார். ஒடேசா பகுதியில் 6 குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம்கேட்டது என்று உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி கொன்சாரென்கோ கூறினார்.

Categories

Tech |