மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநங்கைகள் பங்கேற்று தங்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் சுய தொழில் செய்ய அரசு மானியத்தில் வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் எனவும் மேற்படிப்பு தொடர்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது, தற்பொழுது திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றார்கள். நீங்கள் அனைவரும் உங்களது கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வரவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் சிறந்தவர்களாக இருக்க உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் போக்குவரத்து சிக்னல்கள், தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட் உள்ளிட்ட இடங்களில் திருநங்கைகள் சிலர் நன்கொடையாக பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என பல அறிவுறுத்தல்களை வழங்கினார்.