ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களை தரக்குறைவாக திட்டுவதாகவும் கைகளில் கயிறு கட்டக் கூடாது என திட்டுவதாகவும் புகார் கூறினார்கள்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். பின் மாணவர்கள் பள்ளிக்குள் சென்றனர். இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளதாவது, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை தரக்குறைவாக திட்டியதற்கு அதை கண்டித்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். மாவட்ட கல்வி அதிகாரி சென்று விசாரணை நடத்தி இருக்கின்றார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இது போல் புகார் வந்திருக்கின்றது. நான் வெளியூரில் இருப்பதால் வருகின்ற 25வது தேதி பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.