பத்திரபதிவிற்காக போலி ஆதார் அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரின் மனைவி பொன் செல்வி. இத்தம்பதியினர்க்கு சுமன் ராஜா என்ற மகனும் பால சவுந்தரி, சசி பாலா, பொன் சுமதி என்ற மகள்களும் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பாக முத்துராஜா இறந்து விட்டார். இதனால் பொன் செல்வி சுமன் ராஜாவுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சுமன் ராஜா தனது வீட்டின் அருகே தந்தை பெயரில் இருக்கும் 33 சென்ட் இடத்தை விற்பதற்கு வீட்டில் உள்ள அனைவரையும் சம்மதத்தையும் பெற்றுள்ளார். ஆனால் மூத்த சகோதரி பால சவுந்தரி மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் சுமன்ராஜ் ஒட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் சாமி மற்றும் உலகையா உள்ளிட்டோரியின் உதவியுடன் பாலசவுந்தரி பெயரில் போலி ஆதார் அட்டை அட்டை ஒளிமுத்தம்மாள் என்பவருக்கு தயார் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சென்ற ஐந்தாம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சார்பதிவாளர் போலியான ஆதார் அட்டையை தயார் செய்து ஆள்மாறாட்டம் செய்ததை கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்ததின் பெயரில் போலீசார் பொன் செல்வி, அவரது மகன் சுமன் ராஜ், மகள்கள் சசிபாலா, பொன் சுமதி, முத்தம்மாள், ஹரிஹரன் என்ற சாமி, உலகையா, செல்வராஜ், கருப்பசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் சுமன் ராஜ் மற்றும் கருப்பசாமி உள்ளிட்டோரை கைது செய்து மற்றவர்களை வலை வீசி தேடி வருகின்றார்கள்.