தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிதாக பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பனிமூட்டம் நிலவுவதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதனையடுத்து ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததோடு, மலைச்சரிவுகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள பல இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.
இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்வதோடு, செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இதைத்தொடர்ந்து மழையின் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்ததோடு, பல பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் சேரம்பாடி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருடைய வீட்டின் அருகில் மண் சரிவு ஏற்பட்டதால், வீட்டின் பின்புறம் மண் விழுந்தது. இந்த மண் சரிவு தொடர்ந்து ஏற்படும் அபாயம் இருப்பதால், கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.