பண மோசடி செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் காவலாளியாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சில வாலிபர்கள் அந்த காவலாளியிடம் சென்று சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த காவலாளி இதில் உள்ள பெண்கள் யாரும் இங்கு குடியிருக்கவில்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் புகைப்படத்தை அனுப்பி இந்த குடியிருப்பில் தான் தங்கி இருப்பதாக கூறினார். ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பினால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார். அதனை நம்பி பணம் அனுப்பினோம் என அந்த வாலிபர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி குடியிருப்பு மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக சிலர் போலியான முகவரியை கொடுத்து வாலிபர்களை ஏமாற்றியுள்ளனர். அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பண மோசடி செய்தது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்தர்(24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.