மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கூல் கரடுபட்டி என்ற கிராமம் தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த யானை விவசாய தோட்டத்துக்குள் உணவு தேடிய போது அங்கிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையின் உடலை பரிசோதனை செய்து அந்த இடத்திலேயே புதைத்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறியதாவது, விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிர்களை காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக மின்வேலியை அமைப்பதால் இத்தகைய வாயில்லா ஜீவன்கள் உயிரிழக்கின்றன. இந்நிலையில் மின்வேலி அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் காட்டு யானை உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.