திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடது புறம் காஜாமலை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடி தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூகம்பம் வந்ததை போல திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு இடையே பாதாள சாக்கடை மெயின் கிளை செல்லும் திறப்பானிலிருந்து சாக்கடை நீர் சாலையில் ஏற்பட்ட பள்ளம் வழியாக வெளியே வந்த தெருவில் ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று இரும்பு தடுப்புகளை வைத்து அந்த வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சாலையில் ஒரு ஓரமாக அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொக்லைன் இந்திரம் வரவழைக்கப்பட்டு சேதம் அடைந்த சாலையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த பணியை கலெக்டர் பிரதீப் குமார் மாநகராட்சி உதவியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் போன்றோர் பார்வையிட்டுள்ளனர். இந்த சூழலில் இந்த சாலை சமீபத்தில் தான் புதிதாக போடப்பட்டதாகவும் அதற்குள் இப்படி பள்ளம் விழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கமாக வாகனங்கள் அதிகமாக செல்லும் அந்த சாலை நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வாகனங்கள் குறைவாக சென்றதாகவும் இதனால் பள்ளம் ஏற்பட்ட போது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அந்த பகுதியில் தெரிவித்துள்ளனர்.