குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழுமுதல் உதாரணமான குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள். மலையளவு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மனிதநேயம், அப்போலோ பெயர்களை குறிப்பிட்டு விசாரணை செல்வதை விரும்பாத தமிழக அரசு, விசாரணை செய்து வந்த போலீஸ் அதிகாரிகள் குழுவை கலைத்து இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனையும் மாற்றியது. 2017 ல் பதிவான வழக்கு 2018 ஜனவரியில் முடக்கப்பட்டது. 2019 ஜூன் 18 ல் உதவி கமிஷனர் சுந்தரவதனன் அறிக்கையில் சில உண்மைகளை வெளியில் வந்தன.
புதியதாக நியமிக்கப்பட்ட உதவி கமிஷனர் சுப்பிரமணிய ராஜு தான் இறுதி அறிக்கையை முன்வைக்க போகிறார் எனத் தகவல்கள் வருகின்றன. குரூப்-1 முறைகேடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரவேண்டும். 2017 இல் சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மனிதநேயம், அப்போலோ நிறுவனங்கள் விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான் என்று உலகமகா யோக்கியர் போல பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார் உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவாரா? என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமான குரூப் 1 தேர்வு ஊழல்களை மூடி மறைத்து, ஆளும்கட்சிக்கு ஆதரவான அடாவடி நபர்களைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
உலக மகா யோக்கியர் போலப் பேசும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவாரா? #TNPSCScam pic.twitter.com/Cbg38UT3oB
— M.K.Stalin (@mkstalin) February 7, 2020