தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பார்கள் நடத்தப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் சென்னை பாடியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சட்டவிரோத பார்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து அனுமதி இல்லாத பகுதிகள் சட்டவிரதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் சென்னையில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டை மாடி பாரில் நடந்த விருந்தின் போது ஒருவர் மரணம் அடைந்ததை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த பார்கள் மூலமாக பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் மேலும் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு இந்த மனு பற்றி ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மனுதாக்கல் செய்யப்பட்டதால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் மனுதாக்கல் செய்யப்படக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதன் பின் மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கூறப்பட்டது. அதன் பின் இந்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சட்ட விரோத பார்களுக்கு எதிரான மனுவில் நீதிமன்றம் எச்சரிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.