எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறையை கையில் வைத்துக்கொண்டு பெருமளவு ஊழல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் சாலை டெண்டர்களை தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி 4800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. அதன்படி ஒட்டன்சத்திரத்தில் இருந்து அவிநாசி பாளையம் வரையிலான 4 வழி சாலை திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு 713.34 கோடியாக இருந்தது. அந்த திட்டத்துக்கான நிதியானது 1515 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த டெண்டர் ராமலிங்கம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு வண்டலூரில் இருந்து வாலாஜா வரையிலான 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டம் எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான மதுரை ரிங் ரோடு திட்டம் பி சுப்பிரமணியம், நாகராஜன், சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் கொல்லம் 4 வழி சாலையை விரிவுபடுத்துவதற்கு 720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கும், ராமநாதபுரம், விருதுநகர், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளுவர் உள்ளிட்ட சாலைகளில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வெங்கடாசலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பிறகு முதல்வராக பணிபுரியும் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய நெருக்கமானவர்களுக்கு சாலை பணிகளுக்கான திட்டங்களை ஒதுக்கி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிச்சாமியின் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கு கிட்டத்தட்ட 4 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இன்று முறையீடு செய்துள்ளார். இதன் காரணமாக நீதிபதிகள் வழக்கு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என கூறியுள்ளனர்.