இலங்கை நாட்டில் 107 நாட்களுக்கு பின் அதிபர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
இலங்கை நாட்டின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசின் மீது கடும் கோபம் அடைந்த அந்நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி அதிபர் அலுவலகத்தின் நுழைவாயிலை போராட்டக்காரர்கள் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிபர் அலுவலகம் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி போராட்டகாரர்கள் அதிபர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடியதோடு, பல நாட்கள் அங்கேயே தங்கினர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் அலுவலகத்துக்குள் இருந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து 107 நாட்களுக்கு பிறகு அதிபர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் அதிபர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்குள் வந்து தங்களின் வழக்கமான பணிகளை தொடங்கினர்.