திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜர் பகுதியில் சரவணன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் குஜராத் மாநில அகமதாபாத்தில் ஜவுளி விற்பனை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பாரம்பர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் சிங்(30), தசீப் சிங்(33), கைலாஷ் குமார்(30) மற்றும் அசோக் குமார் சான் பால்(44) ஆகியோரிடம் ரூ.59 லட்சத்துக்கு ஜவுளி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் திரும்பி த் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவருடன் சேர்ந்து மேற்கண்ட 4 பேரும் கடந்த 22ஆம் தேதி மாலை ஒரு காரில் சரவணனை ராஜபாளையத்துக்கு கடத்திச் சென்று ஒரு ஓட்டலில் தங்க வைத்தனர்.
அதன் பிறகு அந்த கும்பல் அவரை ஓமலூருக்கு கடத்தி வந்து ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையில் அவர்களிடம் இருந்து தப்பிய சரவணன் லாட்ஜ் மேலாளரிடம், தன்னை ஒரு கும்பல் கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார. இதனையடுத்து அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பெயரில் போலீசார் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாட்ஜில் தங்கி இருந்த லட்சுமணன் சிங், தசீப்சிங், கைலாஷ் குமார், அசோக் குமார் சாம்பால் ஆகிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அம்பேத்கரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.