மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவித்தனர். கொங்கு மண்டலமான கோயமுத்தூரில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும் சட்டமன்ற கட்சி கொறடாவுமாகிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் . கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு பொறுப்பேற்று மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும் நாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை தனக்கு விளம்பரம் மட்டும் தான் முக்கியம் என ஸ்டாலின் செயல்படுவதாகவும் விமர்சித்தார்
எங்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் பயப்பட மாட்டோம் . எங்கள் கழக நிர்வாகிகள் மீது தம்பிகள் மீது வழக்கு பதிவு செய்கிறீர்கள். போலீஸ் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறது . ஸ்டாலினுக்காக திமுகவுக்காக வேலை பார்க்கக் கூடாது . மக்களுக்காக வேலை பார்க்க வேண்டும் என்று விமர்சனம் செய்த எஸ்பி வேலுமணி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வெறும் ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வித்தியாசம்.
திமுக இன்று எங்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. எங்களுக்கும் காலம் வரும் அப்போது திருப்பிக் கொடுக்கப்படும். ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டு வைத்து அம்மாவின் கோயிலான அதிமுக தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும் திமுகவுக்கு மு க ஸ்டாலினுக்கும் பயம் வந்துவிட்டது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 40 பாராளுமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெல்லும். 2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று கண்டிப்பாக முதலமைச்சர் ஆவார். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக சுவாஹா செய்துவிட்டனர். மின்சார கட்டணத்தை இந்த அரசு குறைக்கவில்லை எனில் இன்னும் பெரிய அளவில் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்ற எச்சரிக்கை எஸ் பி வேலுமணி தமிழக அரசுக்கு விடுத்தார்