தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பல்வேறு சிறப்பு திட்டங்கள் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் கல்வி மேம்படவும், அவர்களுக்குள் உள்ள திறமைகளை ஊக்குவிக்கவும் பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கல்வியின் தரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள பள்ளி கல்வித்துறை அதற்கான புதிய வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதாவது, வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும். 5,8, 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்து உள்ளாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். EMIS இணையதளம் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனையடுத்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் கட்டாதது, உடல் நல பிரச்சனை, சிறப்பு தேவை, குழந்தை திருமணம் மற்றும் இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடையில் படிப்பை நிறுத்திய மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.