பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் ரஜினி இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்காக பேசினால் அவருக்குத்தான் ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தார். ரஜினி பாஜகவில் இணைந்தால் தான் எதிர்க்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார். நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கேட்டதற்கு, அவருக்கு அநியாயம் நடந்திருந்தால் அவர் வழக்குத் தொடரலாம் என பதிலளித்தார்.
மத்திய பட்ஜெட் குறித்து கேட்கப்பட்டபோது தான் இன்னும் பட்ஜெட்டை படிக்கவில்லை என்றும்; படித்த பிறகு கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் ராமர் கோயில் கட்டுவதற்கும் சோனியா காந்தியையும், ப. சிதம்பரத்தையும் சிறைக்கு அனுப்புவதற்கான வேலைகளில் தீவிரமாக இருப்பதால் பட்ஜெட் குறித்து தான் படிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா எப்போது கைது செய்யப்படுவார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் கூட வெளிநாடு தப்பி ஓடி உள்ளனர் என பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, தன் கையில் ஒன்றும் இல்லை எனவும்; தனக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கொடுத்தால் கண்டுபிடித்துக் கொடுப்பேன் எனவும் கேலியாகப் பதிலளித்தார்.