விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் ஜே மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஜூலை 15, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியினை இலவசமாக போடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜூலை 15 2022 முதல் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.
பொதுவாக கொரோனா பூஸ்டர் டோஸ் என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்க வைத்துக் கொள்வதற்காக செலுத்தப்படுகின்றது. இரண்டாவது டோஸ் செலுத்திய பின் ஆறு மாத காலத்தில் கொள்ளலாம். அதன்படி ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அதனால் மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவேளை முழுமையாக பின்பற்றுதல் வேண்டும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சோப் மற்றும் தண்ணீர்,சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நுழைவு வாயிலில் நுழைப்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கிருமி நாசினி வைக்க வேண்டும் காய்ச்சல் இருமல் இருந்தால் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவிப்பில் கூறியுள்ளார்.