Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த டாக்டர்…. வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சஞ்சி நகர் பகுதியில் ஆசிக் அசன்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இந்நிலையில் ஆசிக் அசன்முகமதுவின் சகோதரி ஆயிஷாபர்வீன் என்பவர் உடல்நலக்குறைவு  காரணமாக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக ஆசிக் அசன் முகமது தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிக் அசன்முகம்மதுவின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆசிக் அசன்முகமது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் முன்பு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே கொள்ளை நடந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் இந்த துணிகரமான கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று சாந்தி நகர் பகுதியில் மருத்துவர் வீட்டின் அருகில் வசித்து வரும் பள்ளிவாசல் மோதினார் பீர்முகமது என்பவர் வீட்டில் வெளியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் இலுப்பூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் 5 பவுன் நகையும், ரூ.ஒரு லட்சம் திருட்டு போனது. இதனை தொடர்ந்து இலுப்பூர் வடுகர் பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய தாஸ் என்பவரின் வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் இலுப்பூரில் 4 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |