மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை 67-வது வார்டு ராம்நகர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தனக்கு முன்பு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி கணபதியம்மாள்(80) என்பது தெரியவந்தது. அவரது வீட்டிற்கு முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனை சுத்தம் செய்ய வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அறிவுரை கூறி மூதாட்டியை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்துள்ளனர்.