நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சிலர் பிச்சை எடுப்பது வழக்கம். அவர்கள் அந்த பகுதியில் தங்கியும் இருக்கிறார்கள். அவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது உடைய ஒரு நபர் பிச்சை எடுத்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூன் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அவர்களுடன் பிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் குமரி மாவட்ட பிச்சைக்காரனும் பிரகாசும் சேர்ந்து பிச்சை எடுக்க சென்றனர். அப்போது ஒரு கடைக்காரர் ரூ.2 கொடுத்து ஆளுக்கு ரூ.1 வைத்துக் கொள்ளும்படி கூறினார். இதனை பங்கு வைப்பது குறித்து இரண்டு பிச்சைக்காரர்களுக்கும் இடையே நடுரோட்டில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த உருட்டு கட்டையால் குமரி மாவட்ட பிச்சைக்காரை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த பிச்சைக்காரரை வடசேரி போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்ள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பிரகாஷ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். அப்போது அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.500 அபதாரம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். மேலும் அபதாரத்தை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாத ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.