பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல் நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவ செல்வங்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பலமுறை காலை உணவு சாப்பிடாமல் சென்று உள்ளேன். காலையில் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாம் காலையில் குறைவாக தான் சாப்பிடுகிறோம் என்று கூறினார்.
மேலும் மாணவர் செல்வங்கள் பட்டங்களை வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை . முதலில் தன்னம்பிக்கை, தைரியம்,மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள் மற்றும் இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக,மலர் ரீதியாக அல்லது உடல் ரீதியாக தொல்லை தரும் எத்தகைய இழிவு செயல் நடந்தாலும் அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ செல்வங்களே தற்கொலை எண்ணம் கூடவே கூடாது, தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது, உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.