போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்பதாகை இந்திரா காந்தி நகரில் திருநாவுக்கரசு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரசிகா(10) என்ற மகளும், ரஷன்(6) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கலைச்செல்வி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து திருநாவுக்கரசு தனது சகோதரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட சகோதரி வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது திருநாவுக்கரசு தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநாவுக்கரசின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.