உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி. முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழவதும் திருவிழாபோல் ஜொலிக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று மாமல்லபுரத்துக்கு 5 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இலவச பேருந்துகள் மாமல்லபுரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் எனவும், 19 இடங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இன்று முதல் ஆகஸ்ட் 10வரை இந்த சேவை தொடரும்.