நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என அறிவித்து சிறை வளாகத்தில் சிறைத்துறை வாயிலாக நடத்தப்படும் டீக்கடையில் டீ மாஸ்டராக நியமித்தனர்.
இவர் சிறை வளாகத்திலுள்ள டீக்கடையில் தினசரி காலை முதல் மாலை வரை பணிபுரிந்தார். நேற்று காலையில் டேவிட் வழக்கம்போல சிறை வளாகத்திலுள்ள டீக்கடைக்கு வேலைக்கு சென்றார். அதன்பின் மாலை 6:40 மணியளவில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு மாரியப்பனின் மோட்டார்சைக்கிளை டேவிட் நைசாக திருடிக்கொண்டு அதில் ஏறி தப்பி சென்றார். சிறிது நேரத்தில் சிறைக் காவலர்கள் கைதிகளை கணக்கெடுத்தபோது டேவிட் தப்பியதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக சிறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு தப்பி ஓடிய கைதியை வலைவீசி தேடி வருகின்றனர். அத்துடன் சிறை காவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிசென்ற ஆயுள் தண்டனை கைதியை பிடிப்பதற்காக நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நேரடி மேற்பார்வையில், மாநகர பகுதியிலுள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.