சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் முடிவடைந்தது. இதில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து நடிகர் விஜய் நேற்று காலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்றார். இதையடுத்து மாலை 4 மணியளவில் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீரென்று திரண்டு இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கலாம் என்றும், என் எல் சி சுரங்கம் பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் படக்குழுவினரோ பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்.10 ஆம் தேதி வரை என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர்.
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி முன் குவிந்தனர். படப்பிடிப்பு அனுமதி வழங்கியதற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் விஜய் ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. பாஜகவின் இந்த செயல் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜயை பழி வாங்கவேண்டும் என்றே பாஜகவினர் இப்படி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜக போராட்டம் நடத்தியதால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்பட துறையில் பெரிய அளவில் பிரச்னை வரவிருப்பதாக தெரிகிறது. தொழிலாளர்களிடம் பிரச்னை செய்வதை ஃபெப்சி அமைப்பு கண்டிக்கிறது. சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்றும் அவர் கூறினார்.