ஆலுவாவில் உள்ள சுற்றுலா இல்லத்தில் யூடியூப் பிரபலம் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் உள்ள சுற்றுலா இல்லத்தில் யூடியூப் பிரபலம் ஒருவர் இறந்து கிடந்தார். உயிரிழந்தவர் ‘ஞான் ஒரு காக்கநாடன்’ என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட திருக்காக்கரையைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின்படி, கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கந்துவட்டி மாஃபியாவிடமிருந்து அவருக்கு மிரட்டல் வந்ததும் தெரியவந்தது. இவர் கடந்த 2015ம் ஆண்டு தனியார் பைனான்சியரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். வட்டியுடன் சுமார் 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்த போதிலும் அவரது குடும்பமும் கந்துவட்டி மாஃபியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு ஆலுவா ரயில் நிலையம் அருகே உள்ள சுற்றுலா இல்லத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார் சுக்கூர். புதன்கிழமை இரவு சுற்றுலா இல்ல ஊழியர் ஒருவரால் அவர் இறந்து கிடந்தது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.