தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியானது மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இலவசமாக போடப்படும். இதனையடுத்து தலைமை செயலகத்தில் உள்ள 6000 ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, மாநிலக் கல்லூரியில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை. வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் படித்து விட்டு வரும் மாணவர்கள் தமிழகத்தில் CRRI பயிற்சி மேற்கொள்வதற்கு ரூபாய் 5.20 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் தற்போது 30,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் படித்து விட்டு வரும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள் வதற்கான இடங்கள் 1881 ஆக உயர்த்தி கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.