நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு கிழக்கு கடற்கரை சாலை முதல் அண்ணா சிலை வரை உள்ள நீர் நிலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல் கட்டமாக குடியிருப்புகள் முன்பு உள்ள தடுப்புகளை மட்டும் அகற்றினர்.
இந்நிலையில் நேற்று தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கவாசகம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் அஜிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் அடுத்த மாதம் இந்த வழக்கு மறு விசாரணைக்கு வருவதால் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் அமைந்துள்ள 4 வீடுகள் முன்பு இருந்த 3 கூரை கொட்டகை, 2 தகர குட்டகை ஆகியவற்றை அகற்றியுள்ளனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.