அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏ.பி. நாடானூரில் 9 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கொடுத்த நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா மற்றும் பத்திரம் தயார் செய்து கிரையம் செய்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி, விசாரணையும் நடைபெற்று வந்தது. இருப்பினும் தற்போது அந்த நிலத்தில் வேலி அமைத்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் அம்மன் கோவில் அருகாமையில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அதில் தோல்வி ஏற்பட்டு அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பின்னர் வேலியை அகற்றவில்லை என்றால் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு அருகில் இருக்கும் சுடுகாட்டில் குடியேற போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.