லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சென்ற 2011 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய பொழுது ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமாருக்கும் அவரின் உறவினர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜெயக்குமாருக்கு சாதகமாக செயல்பட 15,000 ரூபாய் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் முதலில் ரூபாய் 5000 லஞ்சம் கொடுத்த பொழுது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த வழக்கானது கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.