கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் விநாயகர் கோயில் வீதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. 10ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் (56) பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற வாரம்தான் வால்பாறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவது, அழகாக இருக்கிறாய் என ஜாடையாக பேசுவது போன்ற சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மாணவிகள் கழிவறைக்கு சென்றால் கழிவறையின் கதவை மூடுவது மற்றும் மாணவிகளின் செல்போன் எண்ணை கொடுக்குமாறு கேட்பது ஆகிய பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் சென்ற 5 நாட்களாக உடற்கல்வி ஆசிரியரின் இந்த செயல் அதிகரித்து வந்துள்ளது. இது தொடர்பாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி இருக்கின்றனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெற்றோர் சிலர் அந்த பள்ளி தலைமை ஆசிரியை பிரபாவிடம் முறையிட்டுள்ளனர். இதனை அறிந்த ஆசிரியர் பிரபாகரன் இதுபற்றி பெற்றோரிடம் கூறக்கூடாது என மாணவிகளிடம் சத்தியம் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் பல்வேறு மாணவிகள் பெற்றோரிடம் கூறாமல் பயத்துடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சில மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் முன் திரண்டு உடற் கல்வி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர். நேரம் போக போக மற்ற மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் அந்த பள்ளி முன் குவிந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன், உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, கோட்டாட்சியர் இளங்கோவன், பேரூர் பகுதி உதவி கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரனை டிஸ்மிஸ் செய்து உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வற்புறுத்தினர். இதனிடையில் முற்றுகை போராட்டம் நடப்பதை அறிந்த பிரபாகரன் நேற்று பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டார். இப்பிரச்சினை உடனடியாக கலெக்டர் சமீரன் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அவர் உடனே உடற்கல்வி ஆசிரியரான பிரபாகரன் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்பின் காவல்துறையினர் பிரபாகரன்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அடுத்ததாக போராட்டம் நடத்திய பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு ஆசிரியர் பிரபாகரன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது பெற்றோர் கூறியதாவது “இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்று கூறியபடி கலைந்து சென்றனர். இதனிடையில் பள்ளி அருகில் பெரும்பாலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ்கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, சம்மந்தப்பட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார். அத்துடன் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பிரபா, தகவல் தெரிந்தும் போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்தாரா..? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.