சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோயில் அருகேயுள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல்மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செவ்வாய்பேட்டை தீயணைப்புநிலைய வீரர்கள் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மனைவி சீரங்கம்மாள் (80) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய மேல் விசாரணையில் “வேலாயுதம்- சீரங்கம்மாள் தம்பதிக்கு 4 மகன்களும், 10 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் வேலாயுதம் சேலம் மத்திய சிறைச்சாலையில் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த 1984-ம் ஆண்டு பணியின்போது வேலாயுதம் இறந்துவிட்டார்.
அதன்பின் அவருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை ரூபாய் 11 ஆயிரத்தை அவருடைய மனைவி சீரங்கம்மாள் பெற்றுவந்தார். இவர் மகன்வழி பேரன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் பேரனுடன் ஏற்பட்ட தகராறில் சீரங்கம்மாள் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், சென்ற 2 தினங்களாக அப்பகுதியில் சுற்றிதிரிந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் சீரங்கம்மாள் அங்கு உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் பேரனுடன் தகராறு ஏற்பட காரணம் என்ன..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.