இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக உரிய திட்டத்தை வகுக்காதவரை அந்நாட்டுக்கு புதிய கடன்கள் வழங்கப்பட மாட்டாது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாமல் அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகின்றது. அந்நாட்டுக்கு உலக வங்கியின் அறிவிப்பு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. சீனா போன்ற நாடுகள் அந்நாட்டுக்கு அதிக கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. கட்டாமல் உள்ள கடன்களை மறு சீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஏற்கனவே சர்வதேச நிதியம் ( ஐ எம் எஃப்) வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பாதித்து வருகின்றது. இலங்கை நாட்டின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உலக வங்கி ஏற்கனவே 160 மில்லியன் அமெரிக்க டாலர் ( அதாவது இந்திய மதிப்பின்படி ரூபாய் 1 270 கோடி) கடன் வழங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான அடிப்படை நிதியுதவியும் அளிக்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக உரிய திட்டங்களை அரசு வகுக்காதவரை அந்நாட்டுக்கு புதிய கடன்களை வழங்கும் திட்டம் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களின் அடிப்படை தேவைகளை ஆறு மாதங்களுக்கு பூர்த்தி செய்ய 5 பில்லியன் டாலர் (அதாவது ரூபாய் 39,700 கோடி) வரை தேவைப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இந்நிலையில் உலக வங்கியின் அறிவிப்பு அந்நாட்டுக்கு நெருக்கடியை அதிகரிப்பதாக உள்ளது. மேலும் இலங்கையின் பொருளாதார பிரச்சினை அதிகரித்த பின் அந்நாட்டுக்கு நிதியுதவி, எரிபொருள், உணவு மற்றும் மருந்து பொருட்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா அமைந்துள்ளது.