தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் குழந்தைகளின் படிப்பிற்காக ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை சார்பாக நிதி திரட்ட டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது. அந்த ஆட்டத்தில் டென்னிஸின் தல – தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஜர் ஃபெடரர் – ரஃபேல் நடால் ஆகியோர் ஆடினர். அந்தப் போட்டியில் 6-4, 3-6, 6-3 என ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்றார்.
தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஒவ்வொரு ராலியின் முடிவிலும் நடால், ஃபெடரரின் புன்னகைகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்தப் போட்டியைப் பார்க்க 51,954 பேர் வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு போட்டியைப் பார்க்க அதிக ரசிகர்கள் வந்த போட்டி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஃபெடரர் – ஸ்வெரவ் ஆடிய ஆட்டத்தைப் பார்க்க 42,517 பேர் வந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது ஃபெடரர் – நடால் இணை ஆடிய போட்டி முறியடித்துள்ளது.
இந்தப் போட்டியைப் பார்க்க வானவில் தேசத்து ரக்பி அணியின் கேப்டன் சியா கொலிசி வந்தார். அவர் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ஃபெடரருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் ரக்பி ஜெர்சியை பரிசளித்தார். உடனடியாக ரசிகரக்ள் முன் அந்த ஜெர்சியை ரோஜர் ஃபெடரர் அணிந்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.