மனைவியின் தங்கையை வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷும் (23) அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ராஜேஷ்க்கு தனது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 27ம் தேதி இரவு நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த மனைவியின் தங்கையை வழிமறித்து அவர் மீது திரவம் ஒன்றை வீசியுள்ளார்.
இதனை ஆசிட் என நினைத்த அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சல் போட்டுள்ளார். இதனால் ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் மீது பட்டது ஆசிட் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் அவர் ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரித்த போது, மனைவியின் தங்கை மீது காதல் வசப்பட்டு அவரை மயக்கி வசியம் செய்ய மந்திரித்த தண்ணீரை ஊற்றியதாக தெரிவித்துள்ளார். ராஜேஷை திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.