திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் செம்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. செம்பட்டி பேருந்து நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் மாறியது. இதன் காரணமாக பயணிகள் சிரமமடைந்தனர். அத்துடன் செம்பட்டியிலுள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால் அலுவலகத்திலிருந்த அலுவலர்கள் வெளியே போக முடியாமல் சிரமப்பட்டனர்.
இதனிடையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஆத்தூர், சித்தையன் கோட்டை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழைபெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. எனினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோன்று பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்துவருகிறது. அந்த வகையில் இன்றும் பழனி பகுதியில் காலை முதலே கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் திடீரென்று வானில் மேகக்கூட்டம் திரண்டு மழைபெய்ய தொடங்கியது.
பழனியை அடுத்த ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டியில் காற்றுடன் கன மழை பெய்தது. மேலும் பச்சளநாயக்கன்பட்டியில் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் திண்டுக்கல் சாலையோரத்தில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தது. இவற்றில் ஒரு மின்கம்பம் விழுந்ததில் முறிந்தது. அதேபோன்று மற்றொரு மின்கம்பம் மரத்தின் மீது சாய்ந்தது. இருப்பினும் அந்த பகுதியில் குடியிருப்பு மற்றும் ஆட்கள் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அந்த பகுதிக்கான மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.