மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரம படுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிடத்தில் மின்மோட்டார் அறை அருகே எச். எம். எஸ். காலனியை சேர்ந்த முருகன், ஜெகதீசன் என்ற 2 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இவர்களை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த முருகன், ஜெகதீசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.