யு19 உலகக் கோப்பை தொடரின் மூலம் இந்திய சீனியர் அணியில் என்ட்ரி தந்த வீரர்களில் சிலர் சிறந்த வீரர்களாக மாறியுள்ளனர். யுவராஜ் சிங், முகமது கைஃப் முதல் பிரித்வி ஷா, ஷுப்மன் கில் வரை இந்த பட்டியல் நீளும். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நாளை நடைபெறவுள்ள யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதவுள்ளது.
இதில், வெற்றிபெற்று ஐந்தாவது முறை கோப்பையை தூக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி இந்திய அணிக்கு பல எதிர்கால வீரர்கள் கிடைக்கபோகின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ப்ரியம் கார்க்:
இந்திய யு19 அணியின் கேப்டனான இவர், யு19 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவே ஐபிஎல் ஏலத்தில் ரூ 1.9 கோடிக்கு ஹைதராபாத் அணிக்கு ஒப்பந்தமானார். அப்போதிலிருந்து இவரது ஆட்டத்தின் மீதும், கேப்டன்ஷிப் மீதும் எதிர்பார்ப்பு நிலவியது.
அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி சுற்றுவரை கொண்டு சென்ற இவர், முகமது கைஃப் , கோலி, பிரித்வி ஷா, உள்ளிட்ட யு19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்களின் பட்டியலில் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மூன்றாவது வரிசையில் களமிறங்கும் இவர், இந்த தொடரில் இலங்கை அணக்கு எதிராக அரைசதம் அடித்தார். அதன் பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போட்டியில் அவர் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், நாளைய போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என தெரிகிறது.
யஷஸ்வி ஜெய்ஷ்வால்:
இந்தத் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் யஷஸ்வி ஜெய்ஷ்வால். இடதுகை பேட்ஸ்மேனும், பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னருமான இவரது ஆட்டத்திறனை பார்க்கும்போது யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை பார்ப்பதை போல் இருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 2.4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானது ஏன் என்பது இந்தத் தொடர் மூலம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் 54, 29*, 57*, 62, 105* என 156 ஆவரேஜுடன் 312 ரன்கள் குவித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அதன் முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் அரைசதம் என பேட்டிங்கில் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிவருகிறார்.
பானி பூரி விற்ற ஜெய்ஷவாலின் கைகளில் உலகக்கோப்பையை ஏந்த வேண்டும் என்ற ஆசை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு இந்திய அணியில் தற்போது இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் இவரை கூடிய விரைவில் இந்திய சீனயர் அணியில் காணலாம்.
ரவி பிஷ்னோய்:
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் என்றால் பவுலிங்கில் ரவி பிஷ்னோய். லெக் ஸ்பின்னரான இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ. 1.9 கோடிக்கு ஒப்பந்தமானார். தனது சிறப்பான சுழற்பந்துவீச்சின் மூலம் இந்தத் தொடரில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தனது துல்லியமான சுழற்பந்துவீச்சின் மூலம் அவர் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது கவனத்துக்குரியது.
கார்த்திக் தியாகி:
இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் இந்த சிறுவயதில் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்யும் கார்த்திக் தியாகி போன்ற பந்துவீச்சாளர்களை பார்ப்பது அரிதிலும் அரிது. இந்தத் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் அவர் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகள்தான் இந்திய அணியை அரையிறுதிக்குள் நுழைய வைத்தது. இவர் வீசும் யார்க்கர் பந்துகளுக்கு பேட்ஸ்மேன்களிடம் பதில் கிடைக்காமல் ஸ்டெம்புகள்தான் அதிக முறை பறக்கின்றன. ஜூனியர் அளவில் சிறப்பாக செயல்படும் இவர் நிச்சயம் சீனியர் அணியிலும் தடம் பதிப்பார் என்பது தெரிகிறது