Categories
கிரிக்கெட் விளையாட்டு

கபில்தேவ், தோனியின் சாதனையை முறியடித்த ஜடேஜா!

ஒருநாள் போட்டிகளில் ஏழாவது வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனி ஆகியோரது சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கோலி, பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் சொதப்பிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, நவ்தீப் சைனி ஆகியோர் அணியின் வெற்றிக்காக போராடினர்.

குறிப்பாக, ஏழாவது வரிசையில் களமிறங்கிய ஜடேஜா 73 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 55 ரன்களில் இறுதியாக ஆட்டமிழந்தார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 12 அரைசதங்கள் அடித்த ஜடேஜா, ஏழாவது வரிசையில் களமிறங்கி அடிக்கும் ஏழாவது அரைசதம் இதுவாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஏழாவது வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் (6), தோனி (6) ஆகியோரது சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.

இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |