நகைகளை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அருகே முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 23-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 26-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் திருடபட்டிருந்தது.
இது குறித்து தடாகம் காவல்நிலையத்தில் முத்துக்குமார் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கோவையைச் சேர்ந்த மேத்யூஸ், கண்ணன், நிரஞ்சன், விக்னேஷ் ஆகிய 4 பேரும் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.