உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக குரல்கொடுத்து நாட்டை விட்டு வெளியேறிய புடினுக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகப்படும் சூழ்நிலையில், கை கால்களில் உணர்வற்ற நிலையில் அனடோலி சுபைஸ் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுக்கு வெளியே பெயர் குறிப்பிடப்படாத ஐரோப்பியநாடு ஒன்றில் அவர் தங்கி இருப்பதாகவும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளரும், முன்னாள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான Ksenia Sobchak என்பவரே குறித்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
67 வயதான அனடோலி சுபைஸ் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனிடையில் பொதுவாக விளாடிமிர் புடினுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் அனைவரும் விஷம் வைக்கப்பட்டு இறப்பதால் இவ்விவகாரமும் அவ்வாறே விசாரிக்கப்படுகிறது. மேலும் ரசாயன தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அனடோலி சுபைஸின் நிலையானது ஆபத்து கட்டத்தில் உள்ளதாக அவரது மனைவியும் திரைப்பட இயக்குநருமான Avdotya Smirnova தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பிறகு புடினுக்கு நெருக்கமான குறைந்தது 5 செல்வந்தர்கள் மர்மமாக கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் முக்கிய பொறுப்பிலிருந்த அனடோலி சுபைஸ் பதவியை துறந்ததுடன், நாட்டை விட்டும் வெளியேறி இருக்கிறார். கடந்த 1998 முதல் புடினின் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராக செலய்பட்டுவந்த அனடோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டை விட்டு வெளியேறினார். ஜூன்மாதத்தில் சைப்ரஸ் நாட்டில் காணப்பட்டதாக தகவல் வெளியான சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் துருக்கியிலும் அனடோலி சுபைஸ் தங்கி இருந்ததாக கூறுகின்றனர்.