Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. தலை நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவன்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி காந்தாரியம்மன் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரவிளையில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சரண் உள்பட 2 மகன்கள் இருந்துள்ளனர். தற்போது மூத்த மகன் சரண் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சரவணன் தன்னுடைய 2 மகன்களுடன் ஆற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கடையின் அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வலதுபுறம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை மகன்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ஆனால் சரண் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த சரவணனும் மற்றொரு மகனும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்நிலையில் தனது கண் முன்னே சரண் இறந்ததை பார்த்த சரவணன் கதறி அழுதுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தக்கலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரணின் உடலை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பஸ் டிரைவரான விளவங்கோடு பகுதியில் வசிக்கும் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்த தக்கலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |