தமிழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில்மிஷ ஆசாமிகள் உலாவுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆயிரம் மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் கல்லூரி மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களை குறி வைத்து சில சில்மிஷ ஆசாமிகள் தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சில நேரங்களில் பேருந்துகளை தாக்கி சேதம் விளைவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிக் பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு திருடர்களும் பேருந்துகளில் நடமாடுகின்றனர். எனவே இது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்கும் விதமாக நிர்பாயா திட்டத்தின் கீழ் 2500 மாநகரப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் இதுவரை ஆயிரம் மாநகர பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள்,நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய நடவடிக்கையால் பள்ளி செல்லும் மாணவிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.